உடல்நலத்தை குறித்த அக்கறை நம் பெற்றோரிடம் இருந்து வருவது போல, முதுமை குறித்த சிந்தனைகளும் வருவது இயற்கை. நல்ல உடல்நலத்துடன் இருந்த அப்பா, உடம்புக்கு முடியாமல் போவதையும், உழைப்பை மட்டுமே அறிந்த அம்மா, நிறைய மாத்திரை மருந்துகளை எடுக்க ஆரம்பித்திருப்பதை பார்ப்போம். வாழ்வில் சில விசயங்களை தவிர்க்க முடியாது. முதுமை என்பதும் அதில் ஒன்று.
புத்தர் தன்னறிவை பெற்றதற்காக சொல்லப்படும் கதையில் அவர் ஒரு வயதானவரை பார்ப்பதாக சொல்வார்கள். இளமை காலத்தில் ஒரு மனிதன் இருப்பதற்கும், வயதான காலத்தில் அதே மனிதன் தோல் சுருங்கி, நரைத்து, தளர்ந்து இருப்பதையும் பார்த்து புத்தருக்கு ஞானம் வந்ததாக அந்த கதை செல்லும்.
முதுமை என்பது தவிர்க்க முடியாதது என்பது மட்டுமல்ல கொண்டாடப்பட வேண்டியது என்பது என் கருத்து. ஒரு நிறைவான வாழ்விற்கான பொருள், ஒருவருக்கு இளமையில் கிடைப்பதைவிட, முதுமையில் தான் கிடைக்கிறது என்பது எனது தாழ்மையான கருத்து.
மிகப்பெரிய ஆளுமைமிக்க மனிதர்கள், தங்கள் இளமை காலத்தில் மிகப்பெரிய போராளியாக இருப்பார்கள். வயதாக வயதாக அவர்கள் ஒரு குழந்தையை போல மாறிவிடுவார்கள். கலைஞரின் கடைசி சில ஆண்டுகளில் அவரை ஒரு குழந்தையை போல அவரது குடும்பத்தினர் பார்த்துக்கொண்டனர்.
தந்தை பெரியாரின் முதுமை நாட்களில், அவரை ஒரு குழந்தைப் போல அன்னை மணியம்மையார் பார்த்துக்கொண்டதை வியந்தவர்கள் பலர்.
புகழ்ப்பெற்ற எழுத்தாளர் குஷ்வந்த் சிங் 99 வயது வரை வாழ்ந்தார். வாழ்ந்தார் என்று ஒரு சொல்லால் சொல்ல முடியாது. வாழ்வை கொண்டாடினார் என்று சொல்லலாம்.
மகிழ்ச்சியான வாழ்விற்கு குஷ்வந்த் சிங் ஒன்பது வழிகளை சொல்கிறார்:
மகிழ்ச்சியான வாழ்விற்கு முதலும் முக்கியமானதாக தேவைப்படுவது நல்ல உடல்நலம். நல்ல உடல்நலத்தை நீங்கள் கொண்டிருக்காவிட்டால், உங்களால் மகிழ்ச்சியாக வாழ முடியாது. உடல்நலத்தை பாதிக்கும் எந்தவொரு விஷயமாக இருந்தாலும், அது எத்தனை சிறிய விஷயமாக இருந்தாலும், அது உங்களின் வாழ்வில் இருந்து மகிழ்ச்சியை குறைக்கூடியதாகவே இருக்கும்.
இரண்டாவது, நல்ல வங்கியிருப்பு (Healthy Bankbalance). உங்கள் வங்கியிருப்பை நீங்கள் கோடிகளில் வைத்திருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால், எல்லா வசதிகளையும் தரவல்லதாக அது இருக்கவேண்டும். நல்ல சேமிப்போ, பணமில்லாத நிலையோ மனசோர்வை தரக்கூடியதாக இருக்கும். கடன் வாங்குவதும், கடனில் வாழ்வதும் ஒருவரது மகிழ்ச்சியை குறைக்க கூடியதாகவே இருக்கும்.
மூன்றாவது, உங்களுக்கான சொந்தவீடு. வாடகை வீடுகள் உங்களுக்கான மகிழ்ச்சியையோ, பாதுகாப்பையோ தரவல்லதாக இருக்காது. சொந்தமாக ஒரு வீடு, அதிலும் தோட்டம் வைப்பதற்கான ஒரு இடம். இவை மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். நீங்களே உங்களின் கையால், செடிகளை நடுங்கள், மரங்களை நடுங்கள் , அவை வளருவதை, மலருவதை கண்டு ரசியுங்கள்.
நான்காவது, புரிந்துக்கொள்ளும் இணையர் - இங்கே இணையர் என்பது நண்பராக இருக்கலாம் அல்லது உங்கள் வாழ்விணையராக இருக்கலாம்.
உங்கள் இணையரோடு அளவுக்கு அதிகமான கருத்துவேறுபாடுகள் இருந்தால், அது உங்கள் மனநிம்மதியை குறைக்கக்கூடியதாக இருக்கும். எப்போதும் கருத்துவேறுபாடுகளுடன் சண்டையிட்டுக்கொண்டே இருப்பதற்கு மணமுறிவை வாங்கிக்கொள்வது நல்லது.
ஐந்தாவது, பேராசையும், பொறாமையும் கூடாது. உங்களை விட வாழ்வில் சாதித்தவரை கண்டு, புகழ் கொண்டவரை கண்டு, சம்பாதித்தவரை கண்டு - பொறாமை படாதீர்கள். பேராசை படாதீர்கள். அது உங்கள் வாழ்வின் மகிழ்ச்சியை குறைக்கும்.
ஆறாவது, மகிழ்ச்சியான வாழ்வை வாழவேண்டும் என்றால், கிசுகிசு பேசுபவரை, வீண்பேச்சு பேசுபவரை அனுமதிக்காதீர்கள்.
ஏழாவது, உங்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள், நேரத்தை செலவிடுங்கள். உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தரும், நிறைவை தரும் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். அது தோட்ட வேலையாக இருக்கலாம், வாசிப்பாக இருக்கலாம், எழுதுவதாக இருக்கலாம், ஓவியக்கலையாக இருக்கலாம், விளையாட்டாகவோ இசையை கேட்பதாகவோ இருக்கலாம். க்ளப்புகளுக்கு செல்வதும், பார்ட்டிகளுக்கு செல்வதும், மது அருந்த செல்வதும், பிரபலங்களை காண செல்வதும் ஒரு கிரிமினல் வேஸ்ட் ஆப் டைம் என்று சொல்வேன்.
உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு செயல்பாட்டில் தொடர்ச்சியாக ஈடுபடுவது மகிழ்ச்சியான வாழ்விற்கு முக்கியமானதாக இருக்கும்.
எட்டாவது, நாள்தோறும் பதினைந்து நிமிடங்களை தற்சோதனைக்காக செலவிடுங்கள். நாள்தோறும், அதிகாலையும், மாலை வேளையிலும் பதினைந்து நிமிடங்களை தற்சோதனைக்காக செலவிடுங்கள். காலை வேளையில் பத்து நிமிடங்கள், எதுவும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்திருங்கள். உங்கள் மனதையும் ஒருமைப்படுத்த முயற்சியுங்கள். பிறகு ஐந்து நிமிடங்கள், அன்றைய நாளில் நீங்கள் செய்ய வேண்டிய செயல்களை பட்டியலிடுங்கள். இதேபோன்று, மாலை வேளையிலும் ஐந்து நிமிடங்கள் மனதை ஓர்மை படுத்த அமைதியாக உட்கார்ந்திருங்கள். அதன்பிறகு பத்துநிமிடங்கள், அன்றைய நாளில் நீங்கள் முடிப்பதற்காக பட்டியலிட்ட செயல்களை மீண்டும் ஒரு முறை பாருங்கள்.
ஒன்பதாவது, உங்கள் நிதானத்தை இழக்காதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க பாருங்கள். யார் மீதும் வன்மம் கொள்ளாதீர்கள். ஆத்திரமும் வன்மமும் நிம்மதியை இழக்கச் செய்யும்.உங்களது நண்பர் மோசமாக நடந்துக்கொண்டாலும், அதை பொருட்படுத்தாமல் முன்னேறி செல்லுங்கள்.
ஒரு நல்ல வாழ்வை வாழ்வதற்கு, ஒரு மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வதற்கு, நீங்கள் பணக்காரராகவோ, சமூக அந்தஸ்தோ இருக்க வேண்டிய தேவையில்லை.
நல்ல உடல்நலமும், பொருளாதார தன்னிறைவும் முக்கியமானது. அத்தோடு சேர்ந்து மேற்சொன்ன ஒன்பது வழிகளும் ஒரு மகிழ்ச்சியான வாழ்விற்கு பயன்படும்.